search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பிரசினை"

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #waterproblem

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது லிங்கப்பநாயக்கனூர். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் இந்தப்பகுதி மக்கள் அணைப்பட்டி கூட்டுக்குடிநீரையே நம்பி உள்ளனர்.

    ஆனால் கடந்த 6 மாதமாக கூட்டுக்குடிநீர் தண்ணீர் இந்தப்பகுதியில் வினியோகிக்கப்பட வில்லை. மேலும் போர்வெல் தண்ணீரும் கிடைக்காததால் இந்தப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    பெண்கள் சில கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலம் இருந்து வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி லிங்கப்ப நாயக்கனூர் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நாளுக்கு நாள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடவே ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை லிங்கப்பநாயக்கனூருக்கு வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

    இதையடுத்து 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சிறைபிடிப்பு போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். #waterproblem

    ×